Friday, December 23, 2011

கவிதைகள்


1-
வாகன நெரிசல்
நிறைந்த சாலையை
சாமர்த்தியமாய்
கடந்து விடுகிறது பூனை
அதற்கு ஒன்றுமாகி விடக்கூடாது
என்று தொடங்கிய படபடப்பு
அதற்கு ஒன்றுமாகவில்லை
என்ற நிம்மதியில் முடிந்தது
இனி கடந்து போவேன்
படபடப்பின்றி
நிம்மதியுடன்
2-
கை வருடும்போது
ஒரு குழந்தையைப் போல
அமைதியாக இருக்கும்
இந்த கூழாங்கல்
எறியும் போது
ஒரு பறவையைப் போல
பறந்து போய் விடுகிறது
3-
புல்லின் வார்த்தைகள்
பனித்துளிக்குத் தெரியும்
அதை சொல்லத் தொடங்கும் போதெல்லாம்
உலர்ந்து போய்விடுகிறது
4-
எழுதும் இந்த வரியும்
எழுதப் போகும்
அடுத்த வரியும்
எப்படி உருவாகிறது என்று
எனக்குத் தெரியாது
ஒரு வேளை
அந்த வரிகளுக்குத் தெரியுமா
எனக்குத் தெரியவில்லை என்று 
5-
ரயில் தண்டவாளத்தில்
தலை வைத்து
தற்கொலை செய்து கொள்ளும்
கனவை
திரும்ப திரும்ப
ஒத்திகை செய்கிறேன்
ரயிலுக்குள்ளும்
நானே இருந்து
சங்கிலியை இழுத்து விடுவதால்
கூடி வராமல் போகிறது
6-
நதி உறைந்த போது
மீன் சிலையானது
நீர் தளர்ந்து
நதியாகிய போது
நீந்த தெரியாத சிலை
மூழ்கிப் போனது
புதுப்புது மீன்கள்
கடந்து போக

----நன்றி 
தடாகம் இணையம் .
Download As PDF

No comments:

Post a Comment