Wednesday, May 09, 2012

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் யோகா செய்வதற்கு வயதில்லை

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள் 
• சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.

• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.


• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது . பாய் (அ) விரிப்பு விரித்து தான் செய்ய வேண்டும்.


• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களாகிய சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைச் செய்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.

• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.

• உடல் உறவு கொள்ளும் நாட்களிலும் ஆசனம் செய்தல் கூடாது.

• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.

• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.

• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.


• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.

• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.

•  யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம். 

• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும்.


யோகாவிற்கு வயதில்லை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம். குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை நுரையீரலே உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. கல்லீரலும், பித்தப்பைகளும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. இவர்களுக்கு மார்புச்சளி, பசியின்மை, ஆஸ்துமா, செரியாமை, மலச்சிக்கல், வயிற்றுப் பூச்சி ஆகியவை ஏற்படலாம். 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். 

• 10 முதல் 20 வயதுள்ளவர்கள் யோகாசன பயிற்சிகளோடு பிராணாயாமம், தியானம், கண் பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ஒழுக்க கட்டுப்பாடு வளர வேண்டிய முக்கியமான பருவம். 

• 20 முதல் 30 வயது வரையான பருவம் இளம் பருவம். என்றாலும் இதுதான் முதுமையின் தொடக்கமும் கூட. பின்னால் வளைந்து செய்யும் ஆசனங்களை செய்ய வேண்டும். இதனால் முதுகுத்தண்டு பலம் பெறும். மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கும். இந்த வயதில் பகலில் உறங்காமல் இருக்க வேண்டும். அப்படி பகலில் உறங்கினால் மூளை மந்தமாக இயங்கும். 


• 30 முதல் 40 வயதுக்குள்ளாக உடல் இளமையை இழக்கத் தொடங்கும். புருவங்களுக்கு மத்தியில் சுருக்கம் தோன்றும். யோகாசனம் மற்றும் பிராணாயாம பயிற்சிகளை தொடர்ந்து வர வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளும் மிகவும் அவசியம். 

• 40 முதல் 50 வயதிற்குள்ளாக கண்களுக்கு பக்கத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். தவறாது யோகாசனங்கள் செய்து வர வேண்டும். பெண்களும் யோகா செய்து வந்தால் மெனோபாஸ் பருவத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கால் கருப்பையை அகற்ற வேண்டிய அளவுக்கு சிக்கல் வராமல் தடுக்கலாம். 


• 50 வயதுக்கு மேல் பெரும்பாலானவர்களின் உடல் வியாதிகளின் சங்கமமாக மாறிவிடும். காதுகள் கேட்கும் ஆற்றல் குறைய ஆரம்பிக்கும். இதய நோய்கள் அதிகரிக்கும். எலும்பு முறிவு, சளி பிடித்தல் போன்ற கோளாறுகள் தோன்ற ஆரம்பிக்கும். தினம் தவறாது விபரீதகாரணி, பத்ராசனம் போன்ற ஆசனங்கள் செய்ய வேண்டும். சிறு வயது முதலே யோகாசனம் செய்து வந்திருந்தால் இவற்றில் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். 
Download As PDF

Monday, May 07, 2012

நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த ஆன்மிக கருத்துரைகள்


நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை?

நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. 
ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! 
இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. 
அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். 
சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. 
இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். 
கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. 
மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. 
பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. 
இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். 
கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். 
பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

சொர்க்கம் , நரகம் செல்லுவதற்கான பாதை 
சொர்க்கம் , நரகம் செல்லுவதற்கான பாதை என்பது ஏதோ நீண்ட தூரத்தில் உள்ளது. அல்லது நம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள்.
நாம் செய்யும் செயலில் தான் சொர்க்கம் மற்றும் நரகத்திற்கு செல்வதற்கான பாதை உள்ளது என்பது தான் உண்மை. இதை மனதில் வைத்துக்கொண்டு நாம் உண்மையாக ஒவ்வொரு செயலையும் செய்தால் சொர்க்கத்தில வாசலுக்குள் நுழைந்து விடாலம்.
ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்ததன் பலனையும், ஒரு சத்தியத்தையும் தராசின் இரு தட்டுக்களில் வைத்தால், சத்தியமே மிகுந்திருக்கும் என்று மகாபாரதம் சொல்கிறது. வாய்மையே வெல்லும் என்று சொல்லப்படுவதற்குக் காரணம், சத்தியம் என்றுமே ஜெயிக்கும் என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்குத்தான். என்றென்றும் - எப்போதும் உண்மை பேசி வாழ்பவன் - அதாவது சத்தியத்தையே தன் கொள்கையாகக் கொண்டு வாழ்பவன், கவலை இன்றி வாழ்கிறான். இப்படிப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து வாய்மையின் வழி நின்றால், அவனுக்கு வாக் ஸித்தி உண்டாகும். அவன் சொல்வதெல்லாம் பலிக்கும் என்று ஆன்மிக நூல்களில் குறிப்புகள் இருக்கின்றன.

உண்மையே கடவுள்.
எல்லா அறங்களும் உண்மையைப் பின்தொடர்கின்றன என்பார் வால்மீகி. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்கு மரம் ஏறவேண்டி வந்தாலும் தயாராக இருங்கள் என்பார் காந்திஅடிகள். பொறுமை, அடக்கம், நிதானம், அன்பு, நேர்மை, நியாயம் - இவை போன்ற குணங்களைக் கடைப்பிடித்து வாழும் ஒருவன் சத்தியம் தவற மாட்டான். 
இவற்றுள் எந்த ஒரு குணத்தை இழந்து விட்டாலும், நரகம் அவனுக்கு வலை விரித்துக் காத்திருக்கும். 

ஹக்குயின் என்ற பிரபல புத்த ஞானியிடம் ஜப்பானிய வீரன் ஒருவன் சந்தேகம் ஒன்றைக் கேட்டான். குருதேவா... சொர்க்கமும் நரகமும் இருப்பது உண்மைதானா? ஹக்குயின் அந்த வீரனை நோக்கி, நீ யார்? என்று கேட்டார். 
இந்த நாட்டு அரசனின் வீரம் மிக்க பாதுகாவலன் என்றான். முட்டாளே... உன் முகத்தை இதுவரை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா? கோழையைப் போல் தோற்றம் தரும் உன்னை வீரன் என்று எவன் ஒப்புக் கொண்டான்? என்று கேட்டார் புத்த ஞானி. வீரனுக்குக் கோபம் வந்தது. உடைவாளை உருவினான். ஹக்குயினைக் கண்டம்துண்டமாக வெட்டுவதற்கு நெருங்கினான். வீரன் தன்னை நெருங்குவதற்குள் ஹக்குயின் சிரித்தபடி சொன்னார். 
சற்றுமுன் நீ கேட்ட கேள்விக்குப் பாதி விடை கிடைத்து விட்டது. அதுதான் நீ திறந்து பார்த்திருக்கும் நரகம் என்ற உலகத்தின் பாதை. திடுக்கிட்டு சிலையாக நின்றான் வீரன். 
உருவிய வாளை உறைக்குள் போட்டான். ஞானியை சிரம் தாழ்த்தி வணங்கினான். புத்த ஞானி சட்டென்று சொன்னார்: நீ கேட்ட கேள்விக்கு மறு பாதி விடையும் இப்போது கிடைத்து விட்டது. சிந்திக்கத் துவங்கும்போது பொறுமையைக் கடைப்பிடித்தாய். சொர்க்கத்துக்குப் போகும் பாதை இதுதான்
Download As PDF

Sunday, May 06, 2012

பழமொழிகளின் அர்த்தங்கள், அதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.


களவும்-கற்று-மற
1. களவாடுவதையும் கற்று பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக்
கொள்ளப் படுகிறது.
2. தமிழ் இலக்கியங்களில் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று இலக்கியங்கள் குறிக்கின்றன. எனவே இதையும் குறிக்கிறது என்றும் சொல்பவர்கள் உள்ளார்கள்.
3. இப்பழமொழியின் நிஜவடிவம் ' களவும் கத்தும் மற ' என்று இருக்க வேண்டும். இதில் கத்து என்பதற்கு தமிழில் பொய் அல்லது கயமை என்பது பொருள். திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பது இதன் பொருள் ஆகும்.

சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?

பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

பசி வந்தால் பற்றும் பறந்து போகும்;

பசி வந்தால் சட்டி பானையில் இருக்குற அடிப்பத்தும் பறந்து போகும்;

நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்! 


இப்படி நம்முடைய யூகத்துக்கு கிடைச்சதை எல்லாம் விட்டுப் பார்த்தோம். ஒன்னும் வேலைக்கு ஆகலை; கடைசில, யோசிச்சு யோசிச்சு பசிதான் வந்திருக்குன்னு சொல்லிச் சொன்னோம். அதைக் கேட்ட ஐயா அவர்கள், ஒளவையார் எழுதின நல்வழியில இருந்த ஒரு பாடலை நினைவு படுத்தினாங்க. அதுதாங்க, இந்தப் பாடல்:

மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!


பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பதன் பொருள் தெரியுமா?
ஒருவர் தன் வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்வது உகந்ததல்ல. ஆயிரம் முறை மாப்பிள்ளை வீட்டுக்கோ, பெண் வீட்டுக்கோ போயாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வை என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். போய் என்பதே பேச்சுவழக்கில் பொய் என்று மாறி விட்டது. இந்தப் பொய்யை உண்டாக்கியது எந்த புண்ணியவானோ? தெரியவில்லை.
அரசனை நம்பி புருசனை கைவிடாதே
(அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக)
அரசன் தன்னை பார்த்துக்கொள்வதாக சொன்னதை நம்பி தன் சொந்த கணவனை விட்டு வந்த பெண் பின்பு அரசனும் இல்லை கணவனும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையை கூறுகிறது இப்பழமொழி.
இப்பழமொழி உதாரணமாக பயன்படுத்தப்படும்.
புருசன் = கணவன்
இவை ஒத்த பழமொழிகள்:
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே,,
விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றாராம்- இதன் பொருள் தெரியுமா?
விடிய விடிய ராமாயணம் கேட்டவனிடம், சீதைக்கு ராமன் யார்? என கேள்வி கேட்டார் உபன்யாசகர். சித்தப்பா என்றாராம் சொற்பொழிவைக் கேட்டவர். வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டார் உபன்யாசகர். இவ்வளவு நேரம் ராமாயணம் சொல்லியும் பலனில்லையே! இருந்தாலும், மற்றவர்கள் மனது புண்படும் அல்லவா! நிலைமையை இப்படி சமாளித்தார். இவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லை. சித்தம்+அப்பா என்று அவர் சொல்கிறார். சித்தம் என்றால் மனம். அப்பா என்றால் தலைவன். சீதையின் மனதிற்கு ராமன் தானே தலைவன் என பேசி கைத்தட்டல் வாங்கி விட்டார். எந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக் கேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.

கல்லை கண்டால் நாயை காணோம்,
நாயை கண்டால் கல்லை காணோம்,,
சிற்பி ஒருவனின் மகன் செய்யாத குற்றத்திற்காக அரசனால் தண்டனை பெற்று சிறை சென்றான், அதை அறிந்த சிற்பி மனம் நொந்து, அரசர் வழக்கை விசாரிக்காமல், மற்றவர்கள் சொல் கேட்டு தன் மகனுக்கு தண்டனை வழங்கியதை அரசருக்கு உணர்த்த முனைபட்டார்.

சிற்ப கலைஞர் தன் கடும் முயற்சியால் நாய் இன் சிலை ஒன்றை தத்ரூபமாக அசல் நாயை போலவே செதுக்கினர்.
அதை அரசவையில் அரசருக்கு காண்பிப்பதற்காக கொண்டு செல்லும் வழியில், பலரும் "என்ன இந்த மனிதர் நாயை தோளில் வைத்து செல்கிறார்?" என்று கூறினார்கள், சிலர் இவர் வடித்த அந்த நாயின் சிலையை கண்டு இரசித்தனர்
அரசவையிலும் இதே போல் குழப்பம் ஏற்பட்டது, சிலருக்கு உண்மையான நாய் போலவும், சிலருக்கு கல்லில் வடித்த சிலை போலவும் தெரிந்தது.

"அப்போது அரசருக்கு செய்தி வந்தது, சிற்பி ஒருவர் நாயுடன் வந்து இருப்பதாகவும், கல் சிலையுடன் வந்து இருப்பதாவும் இரு வேறாக செய்தி வந்தது, அரசவையில் அதை காண எண்ணி அரசர் வந்த பொழுது, அவருக்கும் நாயாகவும், கல்லாகவும் இரு வேறு கட்சியில் தெரிந்தது "

அப்போது சிற்பி அரசருக்கு விளக்கினர் "அரசே நீங்கள் இதை கல் என்று நினைத்து பார்த்தால், உங்களுக்கு கல் ஆகவே தெரியும், நாய் என்று நினைத்து பார்த்தால் நாய் அகவே தெரியும், எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது.

உண்மையில் இது நாய் போன்று வடிவமைக்க பட்ட கற்சிலை, நிரபராதியான என் மகன் கூட உங்கள் கண்ணுக்கு குற்றவாளியகதான் தெரிந்து இருக்கிறன், அதை தீர விசாரிக்காமல் தண்டனை வழங்கிவிட்டீர்களே". என்று சிற்பி கூறிய பின்பு அரசர் தன் தவறை உணர்ந்து, பின்பு வழக்கை விசாரித்து விடுதலை வழங்கினர்"

எனவே நண்பர்களே எந்த ஒரு விஷயமும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது, அதை வைத்து மட்டும் எந்த ஒரு தீர்மானமும் எடுத்து விட கூடாது, தீர விசாரிக்க வேண்டும். நாம் தவறு என்று நினைத்து பார்த்தல் தவறாதான் தெரியும், நல்லதையே நினைத்து பார்த்தல் நல்லதாகவே தெரியும்.

தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது

மஹாபாரதத்தில் அர்ஜுனன் தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். ஒருதடவை கர்ணன் விட்ட பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் காப்பற்ற தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால்
அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இத்தோடு அர்ஜுனனின் மமதையும் அழிந்தது.

இதிலிருந்தே இந்தப் பழமொழி வந்தது.

ஒரு பெரிய ஆபத்து வந்து அது சிறிய ஆபத்தாக மாறி அதிலிருந்து பிழைத்து்ககொண்டால் இப்பழமொழியை நாம் பயன் படுத்துகிறோம்.
Download As PDF

Friday, May 04, 2012

ஹெல்த் டிப்ஸ்


உடல்நலம்தொடர்பான தகவல்கள்

Download As PDF