Thursday, November 17, 2011

சில சமுக உணர்வுகளில்

மனைவியுடன் இருந்தால்...
என் உறவினர் ஒருவர், திருமணம், சடங்கு, நல்லது, கெட்டது என எங்கு சென்றாலும், தன் மனைவியையும் தவறாமல் அழைத்துச் செல்வார். இதனால், "இழவு வீட்டுக்கு போகும் போது கூட, பொண்டாட்டி இல்லாமல் போக மாட்டான்ய்யா...' என்று, பல்வேறு விதத்தில் அவரை உறவுகளும், நண்பர்களும் கிண்டல் செய்வதுண்டு.
ஒருநாள், அவரிடம், "ஏன் எங்கு சென்றாலும், மனைவி இல்லாமல் செல்வதில்லை...' எனக் கேட்டேன். அதற்கு அவர், "சம்சாரம் கூட ஒரு இடத்துக்கு போறதால், பல நன்மைகள் இருக்கு. முதலில், நண்பர்கள் கூட்டம் நம்மை தொந்தரவு செய்யாது. "மனைவியோடு இருக்காண்டா...' என, ஒதுங்கிக் கொள்ளும். இதனால், "தண்ணி', தம், அரட்டை, அதனால் வம்பு, சண்டை, கெட்டவன் என பெயரெடுப்பது எல்லாம் தவிர்க்கப்படும்.
"தம்பதியராய் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், குடும்பத்துடன் வந்த சந்தோஷம் அவ்வீட்டுக்காரர்களுக்கு கிடைக்கும். மேலும், மனைவியுடன் இருப்பதால், நாமும் கொஞ்சம் அடக்கி வாசிப்போம்; எந்தத் தவறும் நடக்க வாய்ப்பே இல்லை. நீங்களும் இதை பின்பற்றி வாருங்கள்; அதன் பலனை அப்போது புரிந்து கொள்வீர்கள்...' என்று ஒரு போடு போட்டார்.
அவர் சொன்னது உண்மை தான் என புரிந்தது. அவருக்கு ஒரு சபாஷ் போட்டு, மனைவி இல்லாமல் இனி எங்கும் செல்வதில்லை என முடிவும் எடுத்தேன்.
நண்பர்களே... பொது நிகழ்ச்சிகளில் மனைவியுடன் கலந்து கொள்ளுங்கள்; பல தவறுகளை அது தவிர்க்க உதவும். 


எங்கே போனது மனிதநேயம்?
சில நாட்களுக்கு முன், சென்னை மாநகர பஸ்சில், "பீக்-அவர்' நேரத்தில், பயணம் செய்து கொண்டிருந்தேன். பயணத்தின் நடுவில், டிரைவர், வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, எங்கோ சென்று விட்டார். சில நிமிடங்கள் கழித்து, அவர் திரும்பி வந்ததும், பயணிகள், அவரை பிடிபிடி என்று பிடித்து விட்டனர். அதற்கு அவர், சிறுநீர் கழிக்கச் சென்றிருந்ததாகக் கூறினார். அதையும் பொருட்படுத்தாமல், சிலர், அ<லுவலகத்திற்கு தாமதமாகி விட்டதாகக் கூறி, அவரிடம் சண்டையிட்டனர்.
அதற்கு அவர், தனக்கு சர்க்கரை வியாதி உள்ளதாகவும், அதனால் சிறுநீர் பிரச்னையில் அவதிப்படுவதாகவும் தெரிவித்து, மன்னிப்பு கேட்காத குறையாக வண்டியை கிளப்பினார்.
அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. என்ன உலகமிது? டிரைவரும் மனிதர் தானே? சிறுநீர் வந்தால் அவர் என்ன செய்வார்? எங்கே போனது மனிதநேயம்?
இவர் வசைமொழி வாங்குவதற்கு, போக்குவரத்துத் துறையும் ஒரு காரணம். இவர் போன்ற சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு, அலுவலகப் பணி தரலாமே!
யோசிப்பரா?


வளர்ந்த குழந்தைகளின் நினைவாற்றல்!
குழந்தைகளின் நினைவாற்றல் பற்றி, அக்., 30, 2011 வாரமலர் இதழில், இ.உ.இ., பகுதியில் கிரிஜா ஜின்னா, ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதோ இந்த, "வளர்ந்த குழந்தை'களின் நினைவாற்றலை கேளுங்கள்...
சென்னையில் மிக பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள பெண்கள் கல்லூரி அது. அந்தக் கல்லூரியில் படிக்கும் சில பெண்கள், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு, "டிவி'யில் பேட்டி கொடுத்தனர். சிரிப்பு வரவழைக்கும், சுவையான நிகழ்ச்சி அது.
பெண்களின் பொது அறிவுத் திறன் எப்படி உள்ளது என்பதை பரிசோதிப்பதாக, அந்த, "அண்ணாச்சி' சில கேள்விகளைக் கேட்டார்.
அதில் ஒன்று, "கணித மேதை யார்?' என்பது!
நவ நாகரிக உடையில் இருந்த அந்தப் பெண்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? "எங்களுக்கு கணக்கு வகுப்பு நடத்தும், பேராசிரியை தான்...' என, பதில் தந்தனர். சிரிப்பு நிகழ்ச்சி நடத்திய அந்த, "அண்ணாச்சி'க்கு, சிரிப்பை மீறி, "பகீர்' அதிர்ச்சி தான் ஏற்பட்டது. மீண்டும் அதே கேள்வியை கேட்டார். "திருதிரு'வென முழித்து, அசடு வழியும் வாயை மூடிச் சிரித்தனர், அந்தப் பெண்கள்!
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்று கேட்டவர்களை ஒடுங்க வைத்து, "பெண்களுக்கு படிப்பு வேண்டும்...' என, பாரதியார் ஒரு பக்கம் குரல் கொடுக்க, "நான் பட்ட கஷ்டம், என் குழந்தை படக் கூடாது...' என, தாய் தன் பெண்ணை கல்லூரிக்கு அனுப்ப, அப்பெண்ணோ, "கண்டதே காட்சி... கொண்டதே கோலம்...' என, "கிறுகிறுக்க' வைக்கும் நிலையில், "படிக்கிறது!' என்னத்தைச் சொல்ல!
 நன்றி தினமலர் ( இது உங்கள் இடம் )
Download As PDF

No comments:

Post a Comment