Thursday, March 13, 2014

கண்ணாடி


கண்ணாடியில் தெரியும்

என் பிம்பம்

அது நானல்ல..

ஏமாற்றுகிறது கண்ணாடி

என்னை எங்கோ ஒளித்து

எதையோ காட்டுகிறது

என் வீட்டுக் கண்ணாடி



சின்னச் சின்ன சிறகுகள் எனக்குண்டு..

அதைக் கொண்டு

வானம் தொட்டு வரும்

வழக்கம் எனக்குண்டு

இறக்கை கொண்டு இமயம் மீதும்

சிறிது

இளைப்பாறி வருவதுண்டு

சிக்கவில்லை அது என் சின்ன

கண்ணாடிக்குள்..

வண்ணம் எனக்குண்டு

இன்பம் இழைத்து ஆசையில் ஊறி

அன்பில் தோய்ந்து அழுகையில் நனைந்து

துன்பம் துடைத்த

வானவில் வண்ணம் எனக்குண்டு..

கறுப்பு வெள்ளையாய் காட்டுகிறது

கண்ணாடி...

காதல் எனக்குண்டு

கண்ணம் குழிந்து கண்ணில் வழியும்

காட்டவில்லை அதை

என் வீட்டு கண்ணாடி...

வடுக்களும் எனக்குண்டு

தீச்சொல் பட்டு வஞ்சம் எரிந்து

நெஞ்சம் துளைத்த

வடுக்களும் எனக்குண்டு

நல்ல வேளை

அதையும் காட்டாது

எதையோ காட்டி

நிற்கின்றன..

எல்லார் வீட்டுக் கண்ணாடிகளும்.
Download As PDF

No comments:

Post a Comment