Thursday, October 25, 2012

அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொள்ளும் நோய்கள்

மழை என்பது சந்தோசமான விசயம் தான் என்றாலும் அழையா விருந்தாளியாக நோய்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்.
சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமல் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


விரவி மஞ்சள்

மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி ஏற்படும். இதனை தவிர்க்க விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் நனைத்து அதை விளக்கில் காட்டி சுடவேண்டும்.

அப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும்.

மஞ்சள்தூள் ஆவி பிடிங்க

ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

துளசி இலை

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

பனங்கிழங்கு

மழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

மழைக்கால கசாயம்

மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும்.

மூச்சுத்திணறலுக்கு முசுமுசுக்கை

முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட மூச்சு இறைப்பு குணமாகும்.

தலைப்பாரம் நீங்க

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும். நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

சாம்பிராணி புகை போடுங்க

ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

தும்மல் தீர்க்கும் தூதுவளை

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும். சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட எந்தவித சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

பேராசிரியர் ரமணிராஜ்.

சைனஸ் தொந்தரவு உடையவர்கள் தினமும் ஆவிபிடிக்கலாம். அதில் உள்ள வெப்பக்காற்று சளியை இளகவைத்து வெளியேற்றிவிடும். அப்போது நன்றாக மூக்கை சீந்தி சளியை வெளியே எடுத்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்றுமுறை ஆவிபிடிப்பது நல்லது. அதற்கு வசதி இல்லாதவர்கள் தினமும் ஒரு முறையாவது ஆவிபிடிக்கலாம். மூச்சுப்பயிற்சி, யோகாசனம் செய்யலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்தப் பயிற்சிகளை செய்யலாம்.

"ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி, தும்மல், மூக்கில் தண்ணீ­ர் ஒழுகுதல், மூக்கில் சளி அடைப்பு போன்றவை மழைக்காலங்களில் ஏற்படுவது சகஜமே. சைனஸ் பிரச்சினை இருந்தால் மேற்கண்ட தொந்தரவுகள் அதை அதிகமாக்கிவிடும். சைனஸ் என்பது மூக்கின் உள்பகுதியில் எலும்புகளுக்கு மத்தியில் உள்ள வெற்றிடமாகும்.

ஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல் இருந்தால் ஜலதோஷத்தால் வரும் சாதாரண பிரச்சினைகள் அவற்றை அதிகப்படுத்திவிடும்.

அடிக்கடி மூக்கில் தண்­ணீராக ஒழுகினால் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். மூளைக்கு பாதுகாப்பு அளிக்கும் சி.எஸ்.எப். என்ற நீர்ப்படலம் போன்றதொரு பகுதி தலையில் அமைந்துள்ளது. அதாவது மூக்கின் மேல்பகுதிக்கு மேல் மூளையின் அடிப்பகுதி உள்ளது. இவற்றிற்கிடையேயான இடைவெளி அரித்துவிட்டாலோ, பாதிக்கபட்டாலோ, அந்த நீர்ப்படலம் மூக்கின் வழியே தண்­ணீராக சிலருக்கு வெளியேறும். சாதாரண ஜலதோஷம் என்று அதைக் கண்டுகொள்ளாமல் விடும் போதும், காற்றில் உள்ள கிருமிகளை சுவாசிக்கும் போதும் எளிதாக மூளையை தாக்கலாம்.

இப்போது சுமார் 80 சதவீதம் பேருக்கு மூக்குத்தண்டு வளைந்துதான் காணப்படுகிறது. எல்லோருக்கும் இந்த வளைவுப் பிரச்சினை தருவதில்லை. மூக்குத்தண்டின் வளைவு அதிகமாகி வலது மூக்கு அல்லது இடது மூக்கு சுவாசத்தில் சிக்கலை ஏற்படுத்தும் போது சைனஸ் பிரச்சினை ஏற்படுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை. நவீன நோய் பரிசோதனை கருவிகள் வந்துவிட்டதாலும், எண்டோர்ஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை மூலமும் இப்போது சைனஸ்க்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கிறது.

அலர்ஜி, காளான், நுண்கிருமிகள் மூலம் மூக்கில் சதை (பாலிப்) வளரும். மருந்துகளால் இந்த சதை வளர்ச்சியை சரிப்படுத்துவது கடினம். இதையும் சைனஸ் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். நோய் எதிர்ப்பு சக்திதிறன் குறைந்தவர்கள், நீரிழிவுநோய் கொண்டவர்கள், கேன்சர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னும் மூக்கில் சதை வளரும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சதை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.

காளான் வகை சதை வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் விட்டால் கண் நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தி பார்வைத் திறனை குறைக்கவும், சில சமயம் மூளையை பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.

குழந்தைகளுக்கு சைனஸ் வருமா?

குழந்தையின் உடல்வளர்ச்சி மற்றும் உறுப்புகளின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்பதால் சைனஸ் தொந்தரவு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. சிறு வயதிலேயே சைனஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து மாத்திரையில் சரிசெய்ய முயற்சிக்கவும். அறுவை சிகிச்சைதான் தீர்வாக இருக்க முடியும் என்ற நிலை எனில் 10 வயது வரை மருந்து மாத்திரைகள் கொடுத்து நோயின் வீரியத்தை அதிகப்படுத்தாமல் காலம் தள்ளியபின் அறுவை சிகிச்சை செய்யலாம்.

"காது" கொடுத்துக் கேளுங்க...

ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை உள்ளது. இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களை பாதித்து செவிட்டுத்தன்மை உருவாகிறது. ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப்படுகிறது. சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தை கேட்கும் போது காது நரம்புகள் பாதிப்படைகின்றன.

அதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தை குறைத்துக் கொடுக்கும் உபகரணங்களை பயன்படுத்துவது அவசியம். வேலையின் இடையே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று நேரம் இரைச்சல் இல்லாத இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் பேசத் தொடங்கி விடுகிறது. அப்படி மழலை மொழியில் குழந்தை பேசவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைக்கு பேச்சுத்திறமை கிடைக்கவில்லை என்று இரண்டு மூன்று வயது வரை காத்திருக்கின்றனர். கிராமத்திலோ 10 வயதுவரையில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருக்கின்றனர். ஒரு வயதிலேயே இதை கண்டுபிடிக்கும் போது காது கேட்கும் கருவியின் மூலம் கேட்கும் சக்தியை கொடுக்க முடியும்.

தீபாவளி, கோவில் விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்களில் வெடி வெடிக்கும் போது அதன் அருகில் நிற்பதும் காதுக்கு ஆபத்தை தரும். வெடிப்பதன் மூலம் உருவாகும் மிகை ஒலி காதுசவ்வை கிழிக்கவும் அல்லது காது நரம்புகளை பாதிக்கவும் செய்யலாம்.

காதுக்குள் அழுக்கு சேர்ந்தால் "பட்ஸ்" மூலம் சுத்தம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் பட்ஸ் மூலம் சுத்தம் செய்வது தவறான பழக்கம். அழுக்கை வெளியே எடுப்பதற்கு பதிலாக "பட்ஸ்" மூலம் காதுக்குள் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகம். பொதுவாக அழுக்கு தானாகவே வெளியேறும் விதத்தில் காதின் அமைப்பு அமைந்துள்ளது. அப்படி இருந்தும் காதுக்குள் அழுக்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் டாக்டரை தொடர்பு கொண்டு சுத்தம் செய்யலாம். 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது.

காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது?

* நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.

* கருவுற்றிருக்கும் சமயத்தில் வியாதிகளுக்கு தாய் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

* கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு வைரஸ் நோய் அல்லது அம்மை நோய் பாதிப்பு இருந்தால் அது குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கலாம்.

* பரம்பரை நோய் காரணமாகவும் கேட்கும் திறன் பாதிப்படையலாம்.

மேற்கண்ட காரணங்கள் யாவும் நரம்பை பாதித்து அதன் மூலம் கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது. இதுதவிர காது சவ்வு பாதிப்பு, காது எலும்புகள் பாதிப்பு, காதில் சீழ்பிடித்தல், காது சவ்வில் ஓட்டை விழுதல், அதிக இரைச்சல் காரணமாக காதுகேட்கும் திறன் பாதிப்படைகிறது. அதாவது சத்தத்தை சரியாக நடத்திச் செல்ல இயலாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. காதுக்குள் இருக்கும் எலும்புகள் சரியாக "மூவ்" ஆகாமல் இருந்தாலும் கேட்கும் திறமை பாதிப்படையும்.
Download As PDF

No comments:

Post a Comment