Thursday, November 08, 2012

வலிகளோடு தீபாவளி



அன்றுமட்டும் யாரும் எழுப்பாமல் எழுவோம்
”தலைக்கு எண்ணைய் தேய்ச்சி குளிடா”
அம்மாவின் கத்தல் தாளாமல் இருக்கும் போதே 'அப்பாவும்'
ஒற்றை விரல் தொட்டு தலையில்
தேய்த்துக்கொண்டு குளியலறைக்கு ஓடுவோம்
அப்பாவோ, சதசதவென எண்ணையிலேயே
துணிதுவைக்கும் கல்லின் மீது உட்கார வைத்து மிதமான சுடு நீரில் சீகக்காயுடன் ஒரு குளியல், 


அம்மா எண்ணைய் பிசுக்கோடு
அன்றும் சமையலறையில பரபரப்பா இருப்பாள்
குளிப்பதென்னவோ காலை 8 மணி  ஆகிவிடும்
ஒரு வழியாக குளித்து புது துணிகளை அன்னிந்து குடும்பத்துடன்
கோவில் போய்வருவதே வேலை.
துணியின்  சரசரப்போடு மிடுக்கோடு
நடந்து பழகும் நாள் அதுதானாயிருக்கும்,
போட்டிருக்கும் துணிகளைக் தோழர்கலுக்கு காட்டத்தான்
சாமி கும்ம்பிட  என்று,


கோவிலுக்கு சென்று வந்ததும் ,தொலைக்காட்சியில் புதுப்புது 
நிகழ்சிகள் நம்மை ஈர்க்கும் , அப்போது அப்பாவின் அதட்டலோடு சாப்பிட 
பசியோட வேகமாய் அமர்ந்து குடும்பமாக சாப்பிடும் சுகமோ அட அட ,
முறுக்கு, ஜிலேபி , பால் பாயாசம் , என்றும்
இட்லியும் கறிக்கொழம்பும் ஆவி பறக்கும்.

சாப்பிடும்போதே தொலைக்காட்சிக் நிகழ்ச்சிகளுக்கு 
போர் ஒன்று மூளும், இறுதியில் வெல்வார் அப்பா,
யார் வீட்டுப் பட்டாசில் சத்தம் அதிகம் என்பதில் ஆரம்பித்து யார் வீட்டின் முன் அதிகம் குப்பையென காண்பதில்
முடியும் எங்களின் கெளரவம்.



நமது தேவையை பூர்த்தி செய்ய அயல்நாட்டுக்கு வந்த பிறகு  
தீபாவளி வராமலாப் போகும்?

இன்றும் தீபாவளியாம்...
நேற்று வைத்த சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு

வேகவேகமாய் அலுவலகம் செல்லும் வழியில்
அலைபேசியில் வாழ்த்துச் சொல்ல அழைத்தால்
வெடிச்சத்தம் இந்த ஊர் வரைக்கும் கேட்கிறது.
மனசு முழுசும் கொண்டாட்டத்துடன் அலுவலகம்
வந்தால் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும்
அவனவன் வேலையை வாங்குவதில் கெட்டி.

பகலில் பதிவு செய்த தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை இரவில் பார்த்தும்,
காப்பிசெய்த வாழ்த்துக்களை மின்னரட்டை,
முகநூல், நுண்ணிடுகை, தனி மடல், குழு மடல்
எல்லாவிடத்துலேயும் தூவி,
முகம் தெரியா மக்களுடன் கோவிலில் சாமி கும்பிடுகிறேன்.



கொண்டாட்டமில்லாத இந்த ஊரில் அவர்கள் விசேசம் எனக்கில்லை
என் விசேசம் அஅவர்களுக்கு இல்லை ,
ஆக மொத்தத்தில்
மனசில் ஆரம்பித்து மனசில்லாமலே முடிகிறது
எங்களுக்கும் தீபாவளி!

மனக்குமுரல்களுடன் 
சிவசுகு 
Download As PDF

No comments:

Post a Comment