Sunday, May 06, 2012

பழமொழிகளின் அர்த்தங்கள், அதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.


களவும்-கற்று-மற
1. களவாடுவதையும் கற்று பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக்
கொள்ளப் படுகிறது.
2. தமிழ் இலக்கியங்களில் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று இலக்கியங்கள் குறிக்கின்றன. எனவே இதையும் குறிக்கிறது என்றும் சொல்பவர்கள் உள்ளார்கள்.
3. இப்பழமொழியின் நிஜவடிவம் ' களவும் கத்தும் மற ' என்று இருக்க வேண்டும். இதில் கத்து என்பதற்கு தமிழில் பொய் அல்லது கயமை என்பது பொருள். திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பது இதன் பொருள் ஆகும்.

சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?

பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

பசி வந்தால் பற்றும் பறந்து போகும்;

பசி வந்தால் சட்டி பானையில் இருக்குற அடிப்பத்தும் பறந்து போகும்;

நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்! 


இப்படி நம்முடைய யூகத்துக்கு கிடைச்சதை எல்லாம் விட்டுப் பார்த்தோம். ஒன்னும் வேலைக்கு ஆகலை; கடைசில, யோசிச்சு யோசிச்சு பசிதான் வந்திருக்குன்னு சொல்லிச் சொன்னோம். அதைக் கேட்ட ஐயா அவர்கள், ஒளவையார் எழுதின நல்வழியில இருந்த ஒரு பாடலை நினைவு படுத்தினாங்க. அதுதாங்க, இந்தப் பாடல்:

மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!


பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பதன் பொருள் தெரியுமா?
ஒருவர் தன் வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்வது உகந்ததல்ல. ஆயிரம் முறை மாப்பிள்ளை வீட்டுக்கோ, பெண் வீட்டுக்கோ போயாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வை என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். போய் என்பதே பேச்சுவழக்கில் பொய் என்று மாறி விட்டது. இந்தப் பொய்யை உண்டாக்கியது எந்த புண்ணியவானோ? தெரியவில்லை.
அரசனை நம்பி புருசனை கைவிடாதே
(அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக)
அரசன் தன்னை பார்த்துக்கொள்வதாக சொன்னதை நம்பி தன் சொந்த கணவனை விட்டு வந்த பெண் பின்பு அரசனும் இல்லை கணவனும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையை கூறுகிறது இப்பழமொழி.
இப்பழமொழி உதாரணமாக பயன்படுத்தப்படும்.
புருசன் = கணவன்
இவை ஒத்த பழமொழிகள்:
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே,,
விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றாராம்- இதன் பொருள் தெரியுமா?
விடிய விடிய ராமாயணம் கேட்டவனிடம், சீதைக்கு ராமன் யார்? என கேள்வி கேட்டார் உபன்யாசகர். சித்தப்பா என்றாராம் சொற்பொழிவைக் கேட்டவர். வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டார் உபன்யாசகர். இவ்வளவு நேரம் ராமாயணம் சொல்லியும் பலனில்லையே! இருந்தாலும், மற்றவர்கள் மனது புண்படும் அல்லவா! நிலைமையை இப்படி சமாளித்தார். இவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லை. சித்தம்+அப்பா என்று அவர் சொல்கிறார். சித்தம் என்றால் மனம். அப்பா என்றால் தலைவன். சீதையின் மனதிற்கு ராமன் தானே தலைவன் என பேசி கைத்தட்டல் வாங்கி விட்டார். எந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக் கேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.

கல்லை கண்டால் நாயை காணோம்,
நாயை கண்டால் கல்லை காணோம்,,
சிற்பி ஒருவனின் மகன் செய்யாத குற்றத்திற்காக அரசனால் தண்டனை பெற்று சிறை சென்றான், அதை அறிந்த சிற்பி மனம் நொந்து, அரசர் வழக்கை விசாரிக்காமல், மற்றவர்கள் சொல் கேட்டு தன் மகனுக்கு தண்டனை வழங்கியதை அரசருக்கு உணர்த்த முனைபட்டார்.

சிற்ப கலைஞர் தன் கடும் முயற்சியால் நாய் இன் சிலை ஒன்றை தத்ரூபமாக அசல் நாயை போலவே செதுக்கினர்.
அதை அரசவையில் அரசருக்கு காண்பிப்பதற்காக கொண்டு செல்லும் வழியில், பலரும் "என்ன இந்த மனிதர் நாயை தோளில் வைத்து செல்கிறார்?" என்று கூறினார்கள், சிலர் இவர் வடித்த அந்த நாயின் சிலையை கண்டு இரசித்தனர்
அரசவையிலும் இதே போல் குழப்பம் ஏற்பட்டது, சிலருக்கு உண்மையான நாய் போலவும், சிலருக்கு கல்லில் வடித்த சிலை போலவும் தெரிந்தது.

"அப்போது அரசருக்கு செய்தி வந்தது, சிற்பி ஒருவர் நாயுடன் வந்து இருப்பதாகவும், கல் சிலையுடன் வந்து இருப்பதாவும் இரு வேறாக செய்தி வந்தது, அரசவையில் அதை காண எண்ணி அரசர் வந்த பொழுது, அவருக்கும் நாயாகவும், கல்லாகவும் இரு வேறு கட்சியில் தெரிந்தது "

அப்போது சிற்பி அரசருக்கு விளக்கினர் "அரசே நீங்கள் இதை கல் என்று நினைத்து பார்த்தால், உங்களுக்கு கல் ஆகவே தெரியும், நாய் என்று நினைத்து பார்த்தால் நாய் அகவே தெரியும், எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது.

உண்மையில் இது நாய் போன்று வடிவமைக்க பட்ட கற்சிலை, நிரபராதியான என் மகன் கூட உங்கள் கண்ணுக்கு குற்றவாளியகதான் தெரிந்து இருக்கிறன், அதை தீர விசாரிக்காமல் தண்டனை வழங்கிவிட்டீர்களே". என்று சிற்பி கூறிய பின்பு அரசர் தன் தவறை உணர்ந்து, பின்பு வழக்கை விசாரித்து விடுதலை வழங்கினர்"

எனவே நண்பர்களே எந்த ஒரு விஷயமும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது, அதை வைத்து மட்டும் எந்த ஒரு தீர்மானமும் எடுத்து விட கூடாது, தீர விசாரிக்க வேண்டும். நாம் தவறு என்று நினைத்து பார்த்தல் தவறாதான் தெரியும், நல்லதையே நினைத்து பார்த்தல் நல்லதாகவே தெரியும்.

தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது

மஹாபாரதத்தில் அர்ஜுனன் தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். ஒருதடவை கர்ணன் விட்ட பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் காப்பற்ற தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால்
அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இத்தோடு அர்ஜுனனின் மமதையும் அழிந்தது.

இதிலிருந்தே இந்தப் பழமொழி வந்தது.

ஒரு பெரிய ஆபத்து வந்து அது சிறிய ஆபத்தாக மாறி அதிலிருந்து பிழைத்து்ககொண்டால் இப்பழமொழியை நாம் பயன் படுத்துகிறோம்.
Download As PDF

No comments:

Post a Comment