Tuesday, August 02, 2011

நவீன நாகரிக உலகில்

 சர்க்கரை பாதிப்புக்கு செலவில்லா மருத்துவம்..!

     நவீன நாகரிக உலகில், 'சம்பாதிப்பதில் பாதிக்கு மேல் மருந்து மாத்திரைக்கே கொடுக்க வேண்டி இருக்கிறதே!’ என்பதுதான் பலருடைய புலம்பலாக இருக்கிறது.
''இதுபோன்ற செலவு களைக் குறைக்க, 'மருந்தே உணவு, உணவே மருந்து’ என்கிற வாழ்க்கை முறையே சிறந்த தீர்வாக இருக்கிறது'' என்கிறார் ஆற்காட்டைச் சேர்ந்த சித்த மருத்துவ டாக்டர் மகேஸ்வரன். நீரிழிவு நோய்க்கான செலவில்லா மருத்துவம் பற்றி இங்கே விவரிக்கிறார்.
''காலையில் டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ள சர்க்கரை நோயாளிகள் அதற்குப் பதிலாகக் கேழ்வரகு, கம்பு சம அளவு எடுத்து அரைத்து மாவாக்கி கூழ் போல் சமைத்துச் சாப்பிடலாம். இந்தக் கூழின் அளவை மட்டும் கொஞ்சம் அதிகரித்துக் கொண்டு, அதனோடு ஓரிரு இட்லி அல்லது தோசையைச் சாப்பிட்டால் காலை டிபன் ஓவர்! மளிகை மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நவதானிய பாக் கெட்டில் இருந்து ஒரு கைப்பிடி தானியம் எடுத்து பருத்தி துணியில் கட்டி தண்ணீர் தெளித்து 48 மணிநேரம் ஏதாவது பிடிமானத்தில் தொங்கவிடவும். பின்பு முளை கட்டி இருக்கும் அவற்றை பச்சையாக அப்படியே சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதோடு உடலுக்குச் சத்துகளும் கிடைக்கும். இப்படிச் சாப்பிட விரும்பாதவர்கள், பல் வலிமையாக இல்லாதவர்கள் இந்த நவதானியங்களை மொத்தமாக முளை கட்டி, அதனை வெயிலில் காய வைத்து கஞ்சி அல்லது கூழாகக் காய்ச்சியும் சாப்பிடலாம்.

     சம்பா கோதுமையை தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்து, வெயிலில் நன்கு உலர்த்தி ரவையாக உடைத்துக் கொள்ளவேண்டும். இதில், தினமும் ஒன்றரை கோப்பை (150 கிராம்) எடுத்து உப்புமா செய்தும் சாப்பிடலாம். அல்லது கோதுமை, ராகி, கேழ்வரகு தானியங்களை மாவாக அரைத்து தோசை சுட்டும் சாப்பிடலாம். கேழ் வரகு மாவுடன் கொத்துமல்லி, இஞ்சி, முருங்கை இலை, பூண்டு இவற்றைச் சேர்த்து அடையாக செய்து மாலை வேளைகளில் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்'' என்ற டாக்டர் மகேஸ்வரன் தொடர்ந்து,
'
     'சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து அதிகமுள்ள, வாழைத்தண்டு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கீரைத் தண்டு போன்றவற்றை கூட்டு, பொரியலாக இரண்டு அவுன்ஸ் வீதம் ( ஒரு அவுன்ஸ் 30 கிராம்) தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் 'மூன்று வேளைச் சாப்பாடு’ என்ற விதியைக் கொஞ்சம் மாற்றி ஐந்து அல்லது ஆறு வேளையாக பிரித்துச் சாப்பிடுவது நல்லது. இப்படி இன்சுலின் சுரப்புக்கு ஏற்ப உணவைச் சிறிது சிறிதாகச் சாப்பிடும்பொழுது ரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவு குறையும்.

      தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் மாவுச்சத்து (கார்போ ஹைட்ரேட்) அதிகம் உள்ள சாதம், இட்லி, தோசை... போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்துவிட வேண்டும். இதற்குப் பதிலாகக் கோதுமை சப்பாத்தி, கேழ்வரகு இட்லி போன்றவற்றை சாப்பிடலாம்.
குக்கர் சாதத்தில் மாவுச் சத்து அதிகமாக இருப்பதால் அதை அளவோடு பயன்படுத்த வும். சர்க்கரை நோயாளிகள் சாதத்தை வடித்து சாப்பிடுவது நல்லது. 
    
      பச்சரிசி பயன்படுத்திவருபவர்கள், புழுங்கல் அரிசிக்கு மாறினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிச மாகக் குறையும். எப்போதுமே உணவை மென்று நிதானமாகச் சாப்பிட வேண்டும். தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 30-40 நிமிடங்கள் துரிதமான நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலில் உள்ள தேவையில்லாத கலோரி களை குறைக்க உதவும். சாப் பிட்டு அரை மணி நேரம் கழித்து சிறிய நடைப்பயிற்சி, வீட்டு வேலை செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.

     மட்டன் - சிக்கன் ஃபிரைட் ரைஸ், பீட்ஸா, பர்கர் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் வகை உணவு களைத் தவிர்ப்பதோடு உப்பு, காரம், எண்ணெய் ஆகிய வற்றையும் குறைத்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது!'' என்றார்
Download As PDF

No comments:

Post a Comment