Monday, August 01, 2011

தமிழர் திருநாளில் தமிழ்க்கடவுள் தரிசனம்


தமிழர் திருநாளான பொங்கலன்று தமிழ்க்கடவுளாம் வயலூர் முருகனை வணங்குவோமா!

தல வரலாறு: 
     சோழ மன்னன் ஒருவன் வேட்டையாடச் சென்றபோது, இங்கு ஒரே கணுவில் மூன்று கரும்புகள் விளைந்திருந்ததை கண்டான். ஆச்சரியத்துடன் அதை வெட்டியபோது, அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. ஆச்சரியமடைந்த மன்னன், அதனடியில் தோண்டியபோது சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். அந்த இடத்தில் கோயில் எழுப்பினான். சிவனுக்கு ஆதிநாதர் என்ற பெயர் சூட்டினான். அம்பாள் சிலை வடித்து "ஆதிநாயகி' என அழைத்தான். வயல்கள் நிறைந்த இந்த தலத்திற்கு "வயலூர்' என்று பெயர் ஏற்பட்டது.

திருப்புகழ் தந்த திருமுருகன்: 
      திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், அவர் அடியெடுத்துக்கொடுக்க "முத்தைத்தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, "வயலூருக்கு வா!' என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். அப்போதும் முருகன் அவருக்குக் காட்சி தரவில்லை. ஏமாற்றமடைந்த அவர், "அசரீரியே நீ சொன்னது பொய்யா?''என உரக்கக் கத்தினார். அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி "அசரீரி சொன்னது உண்மையே!' எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். உடனே முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின், அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல தலங்களுக்கும் சென்று பாடினார். இவ்வாறு, திருப்புகழ் என்ற ஒப்பற்ற நூல் கிடைக்க அருள் செய்தவர் இவரே.

எழுத்தாளர் கோயில்: 
      இது சிவத் தலம் என்றாலும், சுப்பிரமணியரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபடுகின்றனர். கந்தசஷ்டியின் போது முருகன்- தெய்வானை, பங்குனி உத்திர விழாவில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின்போது, முருகனுக்கு வேடன்,
கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள நான்கு கோயில்களின் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாகக் காட்சி தருவார். அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத்துறையில் உள்ளவர்கள் வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம்.

வாரியார் திருப்பணி: 
      முருகபக்தரான கிருபானந்த வாரியார், 1934ல் இக்கோயிலுக்கு வந்தார். அன்று முருகனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டிருந்தது. கவசம் சாத்த கட்டணம் ஐம்பது காசு என்ற அறிவிப்பைக் கண்ட அவர், ஐம்பது காசை அர்ச்சகரின் தட்டில் போட்டார். கோயில் நிர்வாகியின் கனவில் முருகன், ""என் பக்தனிடம் ஐம்பது காசு வாங்கியிருக்கிறாயே? அதைக்கொண்டு எனக்கு கோபுரம் கட்ட முடியுமா?'' என்று கேட்டார். மறுநாள் நிர்வாகி, கோயிலுக்கு வாரியார் வந்ததை அறிந்து, அவருக்கு ஐம்பது காசை மணியார்டர் மூலம் திருப்பி அனுப்பினார். இதையறிந்த வாரியார் வியந்ததுடன், ராஜ கோபுரம் கட்ட வேண்டும் என்பதை முருகனின் உத்தரவாகக் கருதி, பலரிடம் நன்கொடை பெற்று கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தார். சதுர தாண்டவ 

நடராஜர்: 
     இங்கு காலைத் தூக்காத நடராஜரைத் தரிசிக்கலாம். இது நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். எனவே, இவரது ஜடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு "சதுரதாண்டவ நடராஜர்' என்று பெயர்.
விசேஷ விநாயகர்: அருணகிரி நாதருக்கு காட்சி தந்த "பொய்யா கணபதி' விசேஷமான மூர்த்தியாவார். அருணகிரியார் இவரைப்போற்றி திருப்புகழில் காப்புச்செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இவர் பொருள் கொடுப்பார். இங்கு அருணகிரிநாதருக்கு சன்னதி உள்ளது.

இருப்பிடம்: 
     திருச்சியில் இருந்து 11 கி.மீ., சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் உண்டு.
திறக்கும் நேரம்: 
     காலை 6- மதியம் 1 மணி, மாலை 3.30- இரவு 9 மணி. 
போன்: 0431- 260 7344.
Download As PDF

No comments:

Post a Comment