இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் உலக சதுரங்க வாகையர் (சாம்பியன்) பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த புதனன்று (30.05.2012) மாசுகோவில் முடிவடைந்த இப்போட்டியில் 'டை பிரேக்கர்' முறையில் இசுரேலின் போரிசு கெல்ஃபாண்டை 2.5-1.5 என்கிற கணக்கில் வென்றார்
உலகப் பட்டத்தை முடிவுசெய்ய நடைபெற்ற 12 போட்டிகள் மாசுகோவின் இட்ரெட்யகோவ் அரங்கில் இருவருக்கும் இடையில் நடந்த போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், யார் உலகப் பட்டத்தை வெல்வார் என்பது 'டை பிரேக்கர்' முறையில் தீர்மானிக்கப்பட்டது.
மிக விரைவாக குறிப்பிட்ட நேரத்துக்குள் காய்களை நகர்த்தும் நான்கு 'டை-பிரேக்கர்' போட்டிகளின் இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றதன் மூலம் உலக சதுரங்க வாகையர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இதர மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன.
சென்னையில் பிறந்த ஒரு தமிழரான விசுவநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக உலக சதுரங்கப் பட்டத்தை வென்றுள்ளார். அதிலும் குறிப்பாக நான்கு முறை தொடர்ச்சியாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நான்கு ஆட்டங்களை கொண்ட 'டை பிரேக்கரின்' முதல் ஆட்டத்தில் 33 நகர்வுகள் இடம்பெற்ற பிறகு இருவரும் அந்த ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.
அடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மொத்தமாக 77 நகர்வுகள் இடம்பெற்றன. இதில் ஆனந்த் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். அதன் பிறகு இடம்பெற்ற மற்ற இரண்டு ஆட்டங்களும் சமநிலையில் முடிவடைந்த காரணத்தால் ஆனந்த் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.
விசுவநாதன் முதல் முறையாக 2000ஆம் ஆண்டு உலக சதுரங்க வாகையர் பட்டத்தை வென்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக 2007, 2008, 2010 ஆகிய ஆண்டுகளிலும் இந்தப் பட்டத்தை வென்றிருந்தார்.
அடுத்த உலக சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டி 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
விசுவநாதன் ஆனந்த் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்குச் சொடுக்கவும்.